தொல்லியல் பட்டயப் படிப்பில் தமிழ் புறக்கணிப்பு.. பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்..!
தொல்லியல்துறை படிப்பில் சேருவதற்கான கல்வி தகுதியில் தமிழ்மொழி புறக்கணிப்பு குறித்து பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தொல்லியல் 2 ஆண்டு பட்டயப் படிப்பில் கல்வித் தகுதியில் தமிழ்மொழி இடம்பெற வேண்டும். விதிகளில் உரிய திருத்தம் மேற்கொள்ள பிரதமர் நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, அக்-8

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய தொல்லியல் துறை சாா்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்று கல்லூரி நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதில் எழுத்து மற்றும் வாய்வழித் தோ்வின் அடிப்படையில் 15 விண்ணப்பதாரா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள் என்றும், சோ்க்கைக்கான தகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பண்டைய அல்லது இடைக்கால இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டமும் அவற்றோடு சமஸ்கிருதம், பாலி, பிரகிருதம் போன்ற செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளில் தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழி இடம்பெறவில்லை.
இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதி, பெர்சியன், அரபி மொழிகள் குறைந்த பட்ச தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2004ம் ஆண்டிலேயே செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்து, தொன்மையான வரலாறு உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில், தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.