மலைவாழ் மக்களுடன் வயலில் இறங்கி நாற்று நட்ட அமைச்சர் S.P.வேலுமணி..!
கோவை மாவட்டம் சாடிவயல் அருகே கல்கொத்திபதி மலைவாழ் கிராம மக்களுடன் சேர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நாற்று நடவு செய்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.
கோவை, அக்-8

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சாடிவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களை நேரில் சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவர்களுடைய கோரிக்கைகளையும் அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
அப்போது, கல் குத்தி பதி என்னும் பகுதியில் வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த மக்களையும் சந்தித்து பேசினார். திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, மக்களுடன் மக்களாக வயலில் இறங்கி, நெல் நாற்று நடவு செய்தார். அவ்வாறு நாற்று நடவு செய்து கொண்டே மலைவாழ் மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இந்த எளிமையான செயலைக் கண்டு, மலைவாழ் மக்கள் அமைச்சருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் நாற்றுகளை நடவு செய்தனர்.
பின்னர், மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக தங்குதடையின்றி செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் எவ்வாறு உள்ளது, மேலும் இந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு எந்த மாதிரியான பயிர்கள் விதை பயிர்கள் தேவைப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.