கொல்கத்தாவில் பாஜகவினர் மீது போலீஸ் தடியடி.. வன்முறையாக மாறிய போராட்டம்..!!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தொண்டர்கள் படுகொலையைக் கண்டித்து அக்கட்சியினர் தடையை மீறி போராட்டம் நடத்தினர். பாஜகவினர் நடத்திய பேரணியை காவல்துறையினர் தடுக்க முயன்றதால், அங்கு கலவரம் ஏற்பட்டது.
கொல்கத்தா, அக்-8

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து அரசியல் ரீதியாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஆளும் திரிணாமூல் காங்கிரஸார் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் கொல்லப்படுவதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேற்குவங்கத்தில் பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் இன்று மாநிலம் தழுவிய ‛நபன்னா சாலோ’ என்னும் போராட்டத்தை நடத்தினர். கொல்கத்தா தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். போராட்டத்தை தடுக்கும் விதமாக போலீசார் தடுப்பு அமைத்திருந்தனர். தடுப்பையும் மீறி போராட்டக்குழுவினர் செல்ல முற்பட்டனர். பேரணிக்கு திட்டமிடப்பட்ட சாலைகள், தெருக்கள் அடைக்கப்பட்டன. தடையை மீறி பேரணி நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தடுப்பை மீறி பாஜகவினர் முன்னேறி செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அனுமதி மீறி பேரணி நடத்திய நிலையில், மேற்குவங்க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலையில் டயர்களை தீயிட்டு எரித்தனர். இதனால், அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.
