போலி பல்கலைக்கழங்களில் படித்த மாணவர்களின் சான்றிதழ்கள் செல்லாது.. யுஜிசி அறிவிப்பு..!
நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழங்கள் செயல்பட்டு வருவதாக பல்கலைக் கழக மானியக் குழுவான யுஜிசி தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் போலி பல்கலைக்கழகங்களை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு 8 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.
டெல்லி, அக்-8

நாடு முழுவதும் முறையான அங்கீகாரமின்றி செயல்படும் 24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக, உத்தரப்பிரதேசத்தில் 8 பல்கலைக்கழகங்களும், டெல்லியில் 7 பல்கலைக்கழகங்களும் போலியாக செயல்பட்டு வருவதாக யுஜிசி தெரிவித்துள்ளது. கேரளாவின் ஜெயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், புதுச்சேரியின் ஸ்ரீ போதி அகாடெமி உயர்கல்வி நிறுவனம் உள்ளிட்ட 24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, www.ugc.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “யு.ஜி.சி. சட்டத்துக்கு முரணாக தற்போது 24 சுயபாணி, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் செயல்பட்டுவருவது மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தப்படுகிறது. இதில் படித்த மாணவர்களின் சான்றிதழ்கள் செல்லாது. இவை எந்த பட்டத்தையும் வழங்க அதிகாரம் இல்லை,’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளின்படி முறையாக பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும் என்றும், அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் யுஜிசி தெரிவித்துள்ளது. யுஜிசி வெளியிட்டுள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு கல்வி நிறுவனமும், இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.