மருந்து மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு ஒரு நாட்டை மட்டுமே நம்பியிருப்பது ஆபத்தானது.. நீதிபதி வேதனை..!
மருந்து மூலப்பொருட்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே இந்தியா நம்பியிருப்பதா என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை, அக்-8

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அரசு உதவி வழங்க கோரி சென்னையை சேர்ந்த வின்கெம் என்ற நிறுவனம் அளித்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் புற்றுநோய்க்கு புதிய மருந்துகள் கண்டுபிடிப்பது தொடர்பாக அரசு தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. அதன் காரணமாக உள்நாட்டில் இருக்க கூடிய மூலப்பொருட்களை வைத்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளை செய்ய முடியவில்லை என்று அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மனுதாரர் நிறுவனத்துக்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்குவது குறித்தும் முடிவெடுக்க மத்திய அரசின் நிதித்துறை மற்றும் மருத்துவத்துறை இணை செயலாளர்கள் தலைமையிலான ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஆராய்ச்சிகளுக்கு அரசின் ஆதரவு இல்லாததால் திறமை வாய்ந்த பலரை இழந்துவிடக்கூடிய வாய்ப்பு அதிக அளவில் இந்தியாவில் பார்க்க முடிவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். மருத்துவ மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே 90 % நம்பியிருப்பதாக நீதிபதி கிருபாகரன் கவலை தெரிவித்தார். இறக்குமதிக்கு ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருப்பது ஆபத்தானது. ஒரே நாட்டை நம்பியிருப்பதால் தரம் குறைந்த மருந்துகள் விற்பனைக்கு வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதி உள்நாட்டு ஆராய்ச்சி, ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.