தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, அக்-8

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதாவது சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அந்தமான் பகுதியில் நளை உருவாக உள்ள காற்றழுத்த தழ்வு அடுத்த நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்பதால் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று இரவுடன் கரைத்திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குப்புநத்தம் பகுதியில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.