நாங்குநேரியில் விறுவிறு வாக்குப்பதிவு…

நெல்லை, அக்டோபர்-21

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் உட்பட 23 பேர் களத்தில் உள்ளனர். 1,27,389 ஆண் வாக்காளர்கள், 1,29,748 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர், சர்வீஸ் வாக்காளர்கள் 278 பேர் என, மொத்தம் இத்தொகுதியில் 2,57,418 வாக்காளர்கள் உள்ளனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளதுடன், தடையில்லா மின்சாரம், குடிநீர், சாய்தளம், கழிப்பறை வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக 170 வாக்குப் பதிவு மையங்களில் சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் எஸ்பி, 2 ஏடிஎஸ்பிகள், 17 டிஎஸ்பிகள் உட்பட 2,500 போலீஸார் ஈடுபடுகின்றனர். 73 மையங்களில் உள்ள பதற்றமான 151 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மழை பெய்தாலும் கொட்டும் மழையில் குடைபிடித்த படியே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். காலை 9 மணி நிலவரப்படி 18.04% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், ரெட்டியார் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மேற்கு கட்டிடத்தில் வாக்களித்தார். காலை 11 மணி நிலவரப்படி, 23.89% வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *