அதிமுக எம்எல்ஏ பிரபு மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் திருமண விவகாரத்தில் காதல் மனைவி சௌந்தர்யாவை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, அக்-8

கள்ளக்குறிச்சி தனித் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு. இவருக்கு வயது 34. இவர் தன்னை விட 15 வயது குறைவான, தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் 19 வயது மகள் சவுந்தர்யாவை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலைப் பெற்றோர் ஏற்காத நிலையில், அக்டோபர் 1-ம் தேதி சவுந்தர்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபுவின் பெற்றோர் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு சவுந்தர்யாவின் வீட்டில் மறுப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி தன்னை முழு மனதுடன் திருமணம் செய்துகொண்டதாக பிரபு காணொலி ஒன்றை வெளியிட்டார்.

அதிமுக எம்எல்ஏ பிரபு தன் மகளைக் கடத்தியிருப்பதாகவும், மகளை மீட்டு, கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சவுந்தர்யாவின் தந்தை சாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ பிரபுவால் கடத்தப்பட்ட தன் மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை சாமிநாதன் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அதில், கல்லூரியில் படிக்கும் பெண்ணிடம் எம்எல்ஏ பிரபு ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றிக் கடத்திவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சாமிநாதன் தரப்பில் நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. பெண்ணின் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், சௌந்தர்யாவை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *