கொரோனாவை கையாண்டதில் டிரம்ப் நிர்வாகம் படு தோல்வி.. விவாதத்தில் வெளுத்து வாங்கிய கமலா ஹாரிஸ்..!!

வாஷிங்டன், அக்-8

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இதேபோல் துணை அதிபர் பதவிக்கு டிரம்ப் கட்சி சார்பில் மைக் பென்ஸ், ஜோ பிடன் கட்சியில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், வேட்பாளர்களுக்கான நேருக்கு நேர் விவாதம் தொடங்கி உள்ளது. கடந்த மாத இறுதியில் அதிபர் வேட்பாளர்கள் டிரம்ப்-ஜோ பிடன் நேரடி விவாதத்தில் பங்கேற்று தங்கள் சாதனைகள், திட்டங்களை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு கேட்டனர்.

இந்நிலையில், துணை அதிபர் வேட்பாளர்களுக்கு இடையிலான நேருக்கு நேர் விவாதம் இன்று நடைபெற்றது. ஜோ பிடன் கட்சியின் கமலா ஹாரிஸ், டிரம்ப் கட்சியின் மைக் பென்ஸ் ஆகியோர் காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டனர்.

டிரம்ப் அரசிடம் கொரோனாவை எதிர்கொள்ள சரியான செயல்திட்டம் இல்லை என கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார். கொரோனாவை கையாண்டதில் டிரம்ப் அரசு தோல்வி அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். கொரோனா உயிரிழப்புகளை குறைத்துள்ளதாக மைக் பென்ஸ் பதிலடி கொடுத்தார்.

டிரம்ப் அரசின் மோசமான முடிவுகளால் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். இதனை மறுத்த பென்ஸ், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாக விளக்கம் அளித்தார்.

ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால் வரிச்சலுகைகளை பறித்துவிடுவார் என பென்ஸ் கூறினார். இதற்கு பதிலளித்த கமலா, நீதிபதி நியமனத்தில் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளார்களா? என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார். நாட்டின் பாதுகாப்பே டிரம்பிற்கு முதன்மையானது என பென்ஸ் தெரிவித்தார்.

சீனாவுடனான சமீபத்திய வர்த்தகப் போரை டிரம்ப் நிர்வாகத்தின் சாதனைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டதை ஹாரிஸ் விமர்சனம் செய்தார். வர்த்தகப் போரில் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சீனாவுடனான வர்த்தகக் போர், அமெரிக்காவின் உற்பத்தி பணிகளை இழந்து நாட்டின் விவசாயிகளுக்கு தீங்கு விளைவித்ததாகவும், அவர்களில் பலரை திவால் நிலைக்கு தள்ளியதாகவும் ஹாரிஸ் குற்றம்சாட்டினார். மேலும் டிரம்பும் பென்சும் அறிவியல் மீது நம்பிக்கையற்றவர்கள் என்றும் விமர்சனம் செய்தார். டிரம்ப்-பென்ஸ் நிர்வாகம் அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு வசதியாக இருப்பதாகவும், வெளிநாடுகளில் நேட்டோ நட்பு நாடுகளின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாகவும் ஹாரிஸ் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *