கொல்கத்தாவிடம் 10 ரன்களில் தோல்வி.. யார் காரணம்? – தோனி பேட்டி

துபாய், அக்-8

ஐபிஎல் கிரிக்கெட்டின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது.

தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் டோனி கூறியதாவது:-

எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது ஆனால் பேட்டிங் மோசமாக இருந்தது. குறிப்பாக கடைசி நேரத்தில் 1 ரன்கள் மற்றும் பவுண்டரி எடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவரில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு நெருக்கடியாக இருந்தது. நாங்கள் 2-3 விக்கெட்டுகளை அந்த நேரத்தில் இழந்து இருக்க கூடாது. வரிசையாக அப்போது விக்கெட் விழுந்துவிட்டது. 5-6 ஓவர்களில் போட்டியே மாறிவிட்டது. நாங்கள் அப்போது கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும். சாம் கரன் நன்றாக பேட்டிங் செய்கிறார். சிஎஸ்கே பவுலிங் நன்றாக இருந்தது.
ஆனால் பேட்ஸ்மேன்கள்தான் அணியை மொத்தமாக கைவிட்டுவிட்டனர். ஸ்டிரைக் ரொட்டேஷன் செய்வது முக்கியம்தான். ஆனால் அதே சமயம் கடைசி கட்டத்தில் சரியாக பவுண்டரி செல்லவில்லை. அதுவும் முக்கிய காரணம் ஆகும். கடைசி கட்டத்தில் கொஞ்சம் அறிவுபூர்வமாக நாங்கள் செயல்பட்டு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டியின் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடவேண்டிய நிலையில் 12 பந்தை சந்தித்து 7 ரன்னை மட்டுமே எடுத்த ஜாதவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக தோனி, ஜாதவ் இருவரும் பார்க்கப்படுகிறார்கள். ஜாதவ் பேட்டிங் செய்ய வந்த போது சிஎஸ்கே 21 பந்தில் 39 ரன்கள் அடிக்க வேண்டும். ஆனால் ஜாதவ் 12 பந்துகள் பிடித்து வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். தோனியும் 12 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *