மாதம் ரூ.999 செலுத்தி சைக்கிளை வீட்டிற்கு எடுத்து செல்லும் திட்டம்.. சென்னை மாநகராட்சி அறிமுகம்

சென்னையில் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தின் மூலம் ஒரு மாதத்துக்கு ரூ.999 செலுத்தி சைக்கிளை வீட்டிற்கு எடுத்து செல்லும் புதிய வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

சென்னை, அக்-7

சென்னையில் பொதுமக்களிடம் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ‘சைக்கிள் ஷேரிங் திட்டம்’ கடந்த ஜூன் மாதம் சென்னை மாநகராட்சியால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை மாநகராட்சி, தற்போது வாடகை அடிப்படையில் சைக்கிளை வீட்டிற்கு எடுத்து செல்லும் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:-

பொதுமக்கள் வாடகை அடிப்படையில் சைக்கிளை வீட்டிற்கு எடுத்து செல்லும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 7 நாட்களுக்கு ரூ.299-ம், 15 நாட்களுக்கு ரூ.599-ம், 30 நாட்களுக்கு ரூ.999-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் சேர விரும்பும் பொதுமக்கள் 044-26644440 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்தவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டிற்கே வந்து சைக்கிளை வழங்குவார்கள். அவர்களிடம் பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட தொகை முன்பணமாக செலுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து பயனாளிகள் தேர்வு செய்த காலம் வரையிலும் சைக்கிளை வீட்டில் வைத்து கொள்ளலாம். அந்த காலம் முடிந்தவுடன் அதிகாரிகளே வீட்டில் வந்து சைக்கிளை பெற்று கொள்வார்கள்.

இந்த திட்டத்துக்காக சென்னையில் ஷெனாய் நகர், அண்ணா நகர் மேற்கு, திருமங்கலம், முகப்பேர், அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட 33 இடங்களில் உள்ள சைக்கிள் நிலையங்களில் 160 சைக்கிள்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *