முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..! விழாக்கோலம் பூண்ட அதிமுக அலுவலகம்..!!
சென்னை, அக்-7

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது பேசிய கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர் செல்வம், தமிழகத்தில் 2021ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவித்தார். மேலும் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு சால்வை போர்த்தி மலர்க்கொத்து கொடுத்து ஓ பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில் 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். வழிகாட்டுக் குழுவில் இபிஎஸ் ஆதரவாளர் 6 பேரும், ஓபிஎஸ் ஆதரவாளர் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ள நபர்கள்:
1.அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
2.அமைச்சர் தங்கமணி
3.அமைச்சர் வேலுமணி
4.அமைச்சர் ஜெயக்குமார்
5.அமைச்சர் சிவி சண்முகம்
6.அமைச்சர் காமராஜ்
7.ஜேசிடி பிரபாகரன்
8.மனோஜ் பாண்டியன்
9.முன்னாள் அமைச்சர் மோகன்
10.கோபால கிருஷ்ணன்
11.சோழவந்தான் மாணிக்கம் எம்எல்ஏ
இந்த அறிவிப்பை அடுத்து அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஈபிஎஸ் ஆதரவாளர்கள் புலிவேஷம் கட்டி ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
