அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!
தமிழகத்தில் 2021ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை, அக்-7

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10 மணியளவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என அறிவித்தார். கட்சியின் முடிவுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.