பீகார் சட்டமன்ற தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் கட்சி 122, பாஜக 121 தொகுதிகளில் போட்டி…!

பாட்னா, அக்-6

பீகார் மாநிலத்துக்கு வருகிற 28-ந்தேதி முதல் நவம்பர் 7-ந்தேதி வரை 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவம்பர் 10-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது. நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மெகா கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டது. மொத்தம் உள்ள 243 இடங்களில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 70, இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) 19, இந்திய கம்யூனிஸ்டு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 4 இடங்களில் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தை ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தளம் – பாரதீய ஜனதா கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா. ஜனதாவும் சம அளவில், அதாவது 50-50 என்ற விகிதத்தில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மொத்தம் உள்ள 243 இடங்களில் 122 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ஜனதாவுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதிஷ்குமார் தனக்குள்ள தொகுதிகளில் இருந்து ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சிக்கு 7 இடங்கள் ஒதுக்கியுள்ளது. இதே போல் விஐபி கட்சிக்கு பாஜகவுக்கு வழங்கப்பட்ட இடங்களிலிருந்து தொகுதிகள் ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *