மூல ஆவணங்கள் எங்கே? முரசொலி நில விவகாரத்தில் ராமதாஸ் கேள்வி

சென்னை.அக்டோபர்.19

 முரசொலி அலுவலகம்  பஞ்சமி நிலத்தில் இல்லை என்பதற்கான  நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும் எங்கே? என்று பா.ம.க  நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு  கேள்வி எழுப்பியுள்ளார்.

 தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! என்று பாராட்டி பதிவிட்டிருந்தார். இது குறித்து டுவிட்டர் பதிவிட்ட  பா.ம.க நிறுவனர்  ராமதாஸ்  அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!” என்று பதிவிட்டிருந்தார். 

  இதற்கு மறுப்பு தெரிவித்து  டுவிட்டர் பதிவிட்ட ஸ்டாலின், “மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை. அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார். அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும் அவர் மகனும் அரசியலைவிட்டு விலகத் தயாரா?’ எனக் கேள்வி எழுப்பினார். 

இந்நிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று, முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?

முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?

முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?

நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை! என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *