கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ தனது மகளை கடத்திவிட்டதாக தந்தை தொடர்ந்த வழக்கு.. நாளை விசாரணை

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்திவிட்டதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, அக்-6

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு கடத்தி சென்ற, தனது மகளை மீட்டுத்தரக் கோரி பெண்ணின் தந்தை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாகதுருகத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், எனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாள். என்னுடைய மகளை கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்தி உள்ளார். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புகார் கொடுத்ததைத் தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே மாயமான எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கோரி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது.

அப்போது நீதிபதி வழக்கை நாளை (அக்.7) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *