அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்..! மாஸ்க் அணியாமல் அலட்சியம்..!
வாஷிங்டன், அக்-6

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா இருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கடந்த வியாழன்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வெள்ளியன்று அதிபர் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து டிரம்ப்புக்கு தரப்பட்டது.
இருப்பினும் ட்ரம்பின் உடல்நிலை குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் 4 நாள் சிகிச்சைக்குப் பிறகு டிரம்ப் மருத்துவமனையில் இருந்து கடற்படை ஹெலிகாப்டர் மூலம் இன்று வெள்ளை மாளிகை திரும்பினார். முன்னதாக, உடல்நிலை குறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் உண்மையிலேயே நன்றாக இருக்கிறேன். கொரோனாவுக்கு யாரும் அச்சப்பட தேவையில்லை. அது உங்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும் அளவுக்கு டிரம்ப் உடல்நிலை தேறிவிட்டதாகவும், கடந்த 72 மணிநேரமாக அவருக்கு மூச்சித்திணறல், காய்ச்சல் எதுவும் இல்லை என வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது மிக அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தும் வகையில், தொற்று பாதித்த டிரம்ப் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக இருந்தது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.