மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி நிலுவை தொகை ரூ.20,000 கோடி இரவுக்குள் விடுவிப்பு.. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி நிலுவை தொகை ரூ.20,000 கோடி இன்றிரவு விடுவிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லி, அக்-5

கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில் நடப்பாண்டில் மாநிலங்களின் ஜிஎஸ்டி வரி வருவாய் சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ள நிலையில், இத்தொகையை மத்திய அரசு தந்து ஈடுசெய்ய வேண்டும் என மாநிலங்கள் கோரினர். இத்தொகையை ரிசர்வ் வங்கியிடம் இருந்து சிறப்புக் கடனாகவோ அல்லது வெளிச் சந்தையிலிருந்தோ திரட்டிக் கொள்ளுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆலோசனை கூறியிருந்தது.

மேலும் ஆடம்பரப் பொருட்கள் மற்றும் மது, புகையிலை போன்ற எதிர்மறைப் பொருட்களுக்கான கூடுதல் வரியை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கும் அதிகமாக வசூலித்து இக்கடனை திரும்ப செலுத்திக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. கடன் வாங்கும் திட்டத்தை ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், இதை பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் ஏற்கவில்லை. தங்களுக்கு வரவேண்டிய தொகையை மத்திய அரசுதான் ஏற்பாடு செய்து தரவேண்டும் என அம்மாநிலங்கள் திட்டவட்டமாக கூறிவிட்டன. மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட இழப்பை விதிமுறைகளின்படி தாங்கள் ஈடு செய்யவேண்டிய தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. இரு தரப்புக்கும் இடையே நிலவும் கடும் கருத்து வேறுபாடு உருவெடுத்த நிலையில் இன்று காணொலி மூலம் 42வது ஜிஎஸ்டி கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை, கடன் திட்டம் குறித்து காரசாரமான வாதம் நடைபெற்றது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகை ரூ.20,000 கோடி இன்றிரவு விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே குறைவாக ஐ.ஜி.எஸ்.டி பங்கை பெற்றுள்ள மாநிலங்களுக்கு ரூ.24,000 கோடி பிரித்து அடுத்த வாரம் இறுதிக்குள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஜனவரி 1-ம் தேதி முதல், ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கும் குறைவாக உள்ள வரி செலுத்துவோர் மாதாந்திர வருமானத்தை தாக்கல் செய்ய தேவையில்லை, அதாவது ஜிஎஸ்டிஆர் 3 பி மற்றும் ஜிஎஸ்டிஆர் 1. அவர்கள் காலாண்டு வருமானத்தை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *