உ.பி. வன்கொடுமையை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி.. திமுக எம்.பி. கனிமொழி கைது..!
சென்னை, அக்-5

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு எதிர்கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நீதி கேட்டு ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல்காந்தி மற்றும் பிரியங்காகாந்தி மீது தாக்குதல் நடத்திய சம்பவமும், உத்தரபிரதேச போலீசாரின் நடவடிக்கையும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். இதனைச் செய்ய மத்திய அரசு, உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த உணர்வுகளை மத்திய அரசுக்குத் தமிழக கவர்னர் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காக திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு கவர்னர் மாளிகை நோக்கி அணிவகுத்து பேரணியில் ஈடுபட்டனர். பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெண்களை பாதுகாக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய முககவசம் அணிந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணியில் பங்கேற்றனர்.
இருப்பினும், தடையை மீறி பேரணி நடத்தியதாக திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட திமுக மகளிரணியினரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து, திமுகவினர் போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து எம்.பி. கனிமொழி கீழே இறங்கி வந்து அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி விட்டு மீண்டும் வாகனத்தில் ஏறினார். பேரணி முடிவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் மனு அளிக்க திமுகவினர் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.