2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான மனு.. இன்று முதல் விசாரணை
2ஜி வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தினமும் விசாரணை நடைபெறவுள்ளது.
டெல்லி, அக்-5

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்பட 17 பேரை கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து இருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018, மார்ச் 19ஆம் தேதி அமலாக்கப் பிரிவும், சிபிஐயும் தனித்தனியாக மேல்முறையீடு செய்தன. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி உயர் நீதிமன்ற பிரிஜேஸ் சேத்தி வரும் நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பு தனது வாதத்தை முடித்துக் கொண்டது. ஆனால், அதன் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொடர்ந்து வழக்கை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, நவம்பர் மாதம் ஓய்வு பெற இருப்பதால், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்தன.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் கடந்த 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், நீண்டகாலமாக அரசின் செலவில் நடந்து வரும் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 2 ஜி மேல்முறையீட்டு மனுக்கள் அவசர வழக்காக, அக்டோபர் ஐந்தாம் தேதிமுதல் விசாரிக்கப்படும் என உறுதியளித்தது.
அதன்படி 2ஜி மேல்முறையீட்டு வழக்கு இன்றுமுதல் தினமும் விசாரிக்கப்பட உள்ளது.இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2ஜி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. முதலில் சிபிஐ மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.