சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை தான்..! உறுதி செய்தது எய்ம்ஸ் மருத்துவக் குழு

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலையல்ல என்றும், தற்கொலை என்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை, சிபிஐயிடம் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, அக்-3

பிரபல பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த ஜூன் மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது மரணத்தில் சந்தேகம் தெரிவித்து அவருடைய தந்தை அளித்த புகாரின் பேரில், சுஷாந்தின் தோழியும் நடிகையுமான ரியா மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, ரியாவிடம் நடத்திய விசாரணை மற்றும் அவருடைய செல்போனை ஆய்வு செய்ததில், போதைப்பொருள் கும்பலுக்கும் அவருக்கும் தொடா்பு இருப்பதாக தெரியவந்தது. இதுதொடா்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். பின்னா் ரியாவின் சகோதரா், நடிகா் சுஷாந்தின் மேலாளா், வீட்டு உதவியாளா் உள்பட 9 பேரை என்சிபி கைது செய்தது. அதைத் தொடா்ந்து நடிகை ரியாவும் கைது செய்யப்பட்டாா். மேலும், சில பாலிவுட் நடிகைகளுக்கும் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறைந்த நடிகரின் மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க உதவுமாறு சிபிஐ தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் எய்ம்ஸ் தடயவியல் துறை தலைவர் மருத்துவர் சுதிர் குப்தாவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, எய்ம்ஸ் தடயவியல் துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில், சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலைதான் என்றும், அதில் அவர்களது குடும்ப உறுப்பினரோ வழக்கறிஞரோ குற்றம்சாட்டுவதைப்போல விஷம் கொடுத்தோ அல்லது கழுத்தை நெறித்தோ கொலை செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *