ரூ.2 கோடி கடன் வரை வட்டிக்கு வட்டி கிடையாது.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்..!

ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

டெல்லி, அக்-3

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் வங்கிகளில் பெற்ற கடன்களின் மாத தவணையான இ.எம்.ஐ.யை திருப்பி செலுத்த 6 மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதாவது ஆகஸ்டு 31-ந் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. முதலில் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் மேலும் 3 மாதங்களுக்கு மாதத்திர தவணையை செலுத்த சலுகைகள் அளிக்கப்பட்டது.ஆனால் வங்கிகளில் கட்டாத மாத தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொது முடக்க காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வங்கிகள் வட்டி விதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்பட மாட்டாது. ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டி மீது வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது, இதனால் வங்கிகளில் தவணை கட்ட தவறியவர்களுக்கும், சிறு தொழில் புரிபவருக்கும் பலன் கிடைக்கும்.வீட்டுக் கடன், தனிநபர் கடன், கல்விக் கடன், வாகனக் கடனுக்கான தவணைக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்றும், சிறு, குறு, தொழில் கடன், கிரெட்டில் கார்டில் கடன் பெற்றவர்களுக்கான கடன் தொகையில் வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களில் கடன் தவணையை முறையாக செலுத்தியவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

கடன் தவணை சலுகைக் காலத்துக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்ய முடியாது எனக் கூறிய நிலையில் மத்திய அரசின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற திங்கள்கிழமை வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *