உ.பி. இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மம்தா பானர்ஜி கண்டன பேரணி!!
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை எதிர்த்து நடைபெற்ற பேரணியில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
கொல்கத்தா, அக்-3

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான ஒரு தலித் இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து உடலை சிதைத்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம் பெண் உயிரிழந்ததை அடுத்து போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த படுகொலை சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து நாடெங்கிலும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் வெடித்ததால் ஹத்ராஸ் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. பிர்லா பிளானட்டேரியத்திலிருந்து காந்தி மூர்த்தி பகுதி வரையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.