சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? நாளை எமதே.. கமல் அதிரடி ட்வீட்

சென்னை, அக்-2

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 4 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் குடியரசு தினமான ஜனவரி 26, உழைப்பாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 மற்றும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 என 4 முறை இந்தக் கூட்டங்கள் நடைபெறும். எனினும் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 1 , ஆகஸ்ட் 15 ஆகிய கூட்டங்கள் நடைபெறவில்லை.

இந்நிலையில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியான இன்று, கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி நிர்வாகம் செய்த நிலையில், கொரோனா காலத்தில் இந்த கூட்டங்களை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று அதனை தமிழக அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இதுகுறித்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் ட்விட்டரில் பதிவிட்ட அவர், “கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன ? கொரோனா கால செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா? அல்லது மக்கள் நீதி மய்யம் கொண்டுவிடும் என்ற நடுக்கமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? நாளை எமதே” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *