சென்னையில் அக்.5-ம் தேதி முதல் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை.. பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு
சென்னையில் வரும் 5-ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை, அக்-2

கொரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தியாவசியப் பணியாளர்களுக்காக மட்டும் அக்டோபர் 5-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்க உள்ளது.
அத்தியாவசியப் பணியாளர்கள் என்று மாநில அரசு அங்கீகரித்துள்ள நபர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பணியாளர்களுக்காக குறைந்த அளவில் புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மட்டுமே ரயில் டிக்கெட் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், பயண அனுமதிக்கான அடையாள அட்டை இருந்தால்தான், ரயில் நிலையத்துக்குள்ளேயே அனுமதிக்கப்படுவார்கள்.
பொதுமக்கள் யாரும் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு ரயில் டிக்கெட் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணிக்கும் அத்தியாவசியப் பணியாளர்கள், தமிழக அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.