இளைஞர்கள் கதர் ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.. அமைச்சர் S.P.வேலுமணி
காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை கதர் அங்காடியில் உள்ள காந்தியின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கைவினைக் கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கினார்.
கோவை, அக்-2

மகாத்மா காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையில் பல்வேறு இடங்களில் காந்தியின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்படி கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகே உள்ள கதர் அங்காடிக்கு சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அங்கு காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், பொதுமுடக்கத்தில் நலிவடைந்த கதர் கிராம தொழில் வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு உதவித்தொகையை வழங்கினார். மேலும், கதர் அங்காடியில் காந்தி ஜெயந்தியையொட்டி 30% சிறப்பு விற்பனையையும் துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து விழாவில் அமைச்சர் பேசுகையில், “காந்தியின் தியாகங்களை யாராலும் மறக்க முடியாது. நெசவாளர் நலவாரிய உருப்பினர்களுக்கு ஆயிரம் வீதம் 68 பேருக்கு இரண்டுமுறை வழங்கப்பட்டுள்ளது. காந்தியின் நினைவாக இந்தியா முழுக்க துவங்கப்பட்ட காதி அங்காடிகள் எல்லாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இளைஞர்கள் கதர் ஆடைகளை பயன்படுத்த வேண்டும்” என்றார்.

இந்த் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.