அதிமுக அரசு கொரோனாவை விட திமுகவை பார்த்தே பயப்படுகிறது.. கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு.!
சென்னை, அக்-2

சென்னை பூந்தமல்லி அருகே ஜமீன் கொரட்டூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்ப பெறு என்ற வாசகம் அடங்கிய முகக்கவசத்தினை அணிந்து பங்கேற்றார். கிராம சபை கூட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரட்டூர், நடுக்குத்துவயல், காட்டுக்குப்பம் உள்ளிட்ட பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில், உரையாற்றிய மு.க.ஸ்டாலின், இப்போது நடப்பது கிராம சபை அல்ல; மக்கள் சபை என்று தெரிவித்தார். கொரோனாவை காரணம் காட்டி கிராம சபை கூட்டங்கள் ரத்து என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிமுக அரசு கொரோனாவை விட திமுகவை பார்த்தே பயப்படுகிறது. விவசாயிகள் சேற்றில் கை வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்றார்.
மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ஏற்று தமிழக அரசு செயல்படுகிறது. அதிமுக செயற்குழுவை நடத்தும்போது கிராம சபை கூட்டத்தை நடத்தக்கூடாதா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதிமுக செயற்குழு கூட்டத்தில் பரவாத கொரோனா, கிராம சபை கூட்டத்தில் மட்டும் பரவுமா? எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் 3 வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் மசோதாக்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
கூட்டத்தின் இறுதியில் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் வாசித்த போது பொதுமக்கள் கை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார்.