உ.பி. இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம்.. ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்ற ராகுல்காந்தி கைது..!

19 வயது தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று செல்ல முயன்றபோது போலீசாரால் தடுக்கப்பட்டனர். எனவே வெயிலுக்கு இடையே சாலையில் இருவரும், தொண்டர்கள் புடை சூழ நடந்தே சென்றபோது ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே மண்தரையில் திடீரென விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

லக்னோ, அக்-1

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதான பட்டியல் இன இளம்பெண், கடந்த மாதம் 14-ம் தேதி அங்குள்ள நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அக்கிராமத்தை சேர்ந்த உயர் ஜாதி இளைஞர்கள் 4 பேர், அந்த பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது, பெண்ணை கடுமையாக தாக்கினர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக, நாக்கையும் அறுத்ததாக தெரிகிறது.

படுகாயங்களுடன் கிடந்த அப்பெண் மீட்கப்பட்டு ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இளைஞர்கள் தாக்கியதில், அப்பெண்ணுக்கு முதுகு தண்டுவடம் நொறுங்கி இருப்பதும், பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு அந்த பெண் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, டெல்லியிலும், உத்தர பிரதேசத்திலும் போராட்டங்கள் வெடித்தன. அரசியல்வாதிகள், திரையுலகினர், விளையாட்டுத் துறையினர் என பல்வேறு தரப்பினரும் நீதி கேட்டு குரல் கொடுத்தனர். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று ஹத்ராஸ் கும்பலால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றனர். அப்போது அவர்களது வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக புறப்பட்ட ராகுல், பிரியங்கா நடந்தே ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலமாக அவர்கள் சென்று கொண்டிருந்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் வந்த தொண்டர்களை உத்திரப்பிரதேச மாநில போலீசாரும் மற்றும் டெல்லி போலீசாரும் சேர்ந்து தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

தடுத்து நிறுத்தியதன் காரணமாக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த தொண்டர்களை தடுக்க முடியாத காரணத்தால் அவர்களை அப்புறப்படுத்த தடியடி நடத்தினர். தொடர்ந்து நடைபெற்று வந்த வாக்குவாதத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *