மீண்டும் தர்மயுத்தம் தொடங்கும் ஓ.பி.எஸ்… நாளை செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய அறிவிப்பு?..!

சென்னை, செப்-30

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி 3-வது முறையாக தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இருப்பினும், சசிகலாவின் நெருக்கடி காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பிப்ரவரி 7-ம் தேதி மாலை 7 மணியளவில் பிறகு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து தியானம் செய்த ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை தொடங்கினார். சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது, ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை அமைப்பது’ ஆகிய இரண்டும்தான் ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்தத்தின் கோரிக்கைகள். இந்தகோரிக்கை ஏற்கப்பட்டதையடுத்து மீண்டும் கட்சியில் இணைந்து ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வராக பதவியேற்றார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது என அதிமுகவுக்கு ஏற்பட்ட சலசலப்புக்கு அக்டோபர் 7ம் தேதி விடை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே கோஷமிட்டு, அதிமுக இரு பிரிவாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டினர். இரு பிரிவாக பிரிந்து அதிமுக நிர்வாகிகள் முதல்வரையும் துணை முதல்வரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையே, இன்றுடன் 8-ம் கட்ட ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆனால், எல்லா முறையும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து, சென்னையில் இன்று இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம் பெறவில்லை.

இந்நிலையில், நாளை செய்தியாளர்களை சந்திக்கிறேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி உடனான மோதலில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறேன் என்று ஓ.பி.எஸ். கூறியதால் நாளை முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி வருவதாகவும், இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், 2016-ல் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இந்தபோது கட்சியில் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடி மீண்டும் தற்போது நிலவி வருவதாகவும். மீண்டும் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தர்மயுத்தம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *