விவாத நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பை கோமாளி என அழைத்த ஜோ பிடன்!!

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நேரடி விவாதத்தின்போது, ஜோ பிடன், டிரம்பை கோமாளி என அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாஷிங்டன், செப்-30

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிபர் வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் – ஜோ பைடன் இடையே, நேரடியான காரசார விவாதம் நடைபெற்றது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் நேருக்கு நேர் 3 விவாதம் செய்வது வழக்கம். அங்கு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி, ஒஹியோமாகாணம் கிளைவ் லேண்டில் நடைபெற்றது.
முதல் நேரடி விவாதத்தில் டிரம்பும் -ஜோ பிடனும் அனல் தெறிக்கும் விவாதத்தில் ஈடுபட்டனர்.

விவாதத்தில் நடுவராக இருந்த ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் நெறியாளர் கிறிஸ் வேலஸ் எழுப்பிய கேள்விகளுக்கு, வேட்பாளர்கள் இருவரும் பதில் அளித்தனர். அப்போது பேசிய ஜோ பிடன்,’அமெரிக்காவில் 70 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா உயிரிழப்பில் மற்ற நாடுகளை விட அமெரிக்கா மோசமான நிலையில் உள்ளது. கொரோனாவை தடுக்க டிரம்ப் அரசு தவறிவிட்டது. அமெரிக்கா இதுவரை சந்திக்காத மோசமான அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான். நிற வெறுப்பு மற்றும் அவற்றின் அடிப்படையிலான பிரிவினையை ஏற்படுத்த முயன்ற ஒரே அதிபர் டிரம்ப். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக மிக மெதுவான பொருளாதார மீட்புதான் இப்போது உள்ளது. தடுப்பு மருந்து விவகாரத்தில் நாங்கள் உங்களை நம்புவதாக இல்லை. தடுப்பு மருந்து விவகாரத்தில் நாங்கள் விஞ்ஞானிகளைதான் நம்புகிறோம்.டிரம்ப் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியாது; சொல்லப்போனால் அவருக்கு எதுவுமே தெரியாது” என்று விமர்சித்தார். மேலும், கொரோனா வீரியத்தை முன்பே அறிந்திருந்த அதிபர் டிரம்ப், அது பற்றி நாட்டு மக்களிடம் தெரிவிக்கவில்லையென ஜோ பைடன் குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில்,’கொரோனா வைரஸ் என்பது சீனாவின் தவறு சீனாவிலோ, இந்தியாவிலோ எத்தனை கொரோனா உயிரிழப்புகள் என யாருக்கும் தெரியாது. அவர்கள் நேரடி எண்ணிக்கையை கொடுப்பதில்லை. கொரோனா விவகாரத்தில் ஜோ பைடன் சொல்வது எல்லாம் கேட்டு இருந்தால் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பார்கள். H1N1 வைரஸ் விவகாரத்தை ஜோ பைடன் கையாண்ட விதம் என்பது மிகப்பெரிய பேரழிவு. ஜோ பைடன் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்,’என்றார். இதை கேட்ட பைடன் டிரம்பைத் தாக்கி பேசினார்.அவரை “முற்றிலும் பொறுப்பற்றவர்” என்று அழைத்ததோடு, ஜனாதிபதியை தனது ஆதரவாளர்களிடையே நோய் பரப்புவதில் அக்கறை இல்லை, அங்குள்ள மக்கள் சுவாசிப்பதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை என கூறினார். தொடர்ந்து பைடன் டிரம்பை ஒரு ‘கோமாளி’ என்று அழைத்தார். ‘இந்த கோமாளியிடம் இருந்து எந்த வார்த்தையையும் பெறுவது கடினம் – இந்த நபரை மன்னியுங்கள்’ என்று பைடன் கூறினார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *