7 பேர் விடுதலையில் உறுதியான நடவடிக்கை எடுங்கள்:முத்தரசன்

சென்னை.அக்டோபர்.18

ராஜீவ் கொலைவழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
ராஜீவ் காந்தி படுகொலையில் சம்மந்தப்பட்டதாக கூறப்படும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுதலை செய்திட வேண்டுமென ஒட்டு மொத்த தமிழகமே கோரி வருகின்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவை ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது. உச்சநீதிமன்றம் 7 பேர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பு அளித்தது.
தமிழ்நாடு அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர்க்கு அனுப்பியது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஆளுநர் விடுதலை செய்திட இயலாது என்று மறுத்து முதலமைச்சர் எடப்பாடியிடம் தெரிவித்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சரிடம் ஆளுநர் கூறியது உண்மையா? அவ்வாறு எனில் அதனை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டாரா? அவ்வாறு இருப்பின் அதனை ஏன் பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை என்பது குறித்து முதலமைச்சர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
நீட் நுழைவுத் தேர்வில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்து மாநில அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்ட செய்தி மறைக்கப்பட்டது நீதிமன்றத்தின் வாயிலாகவே பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது 7 பேர் விடுதலை குறித்தும் மாநில அரசு மூடி மறைத்து வருகின்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவை, தமிழ்நாடு அமைச்சரவை ஆகிய உயர்ந்தபட்ச அமைப்புகள் மத்திய அரசால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து முதலமைச்சரும் மற்ற அமைச்சர் பெருமக்களும் கவலைப்படாமல் இருக்கலாம். தாங்கள் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக தங்களின் சுயமரியாதை அனைத்தையும் அவர்கள் இழக்கலாம், இழந்து கொண்டும் இருக்கின்றார்கள்.
அதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
ஏழு பேர் விடுதலை குறித்து தன் நிலைபாட்டை முதலமைச்சர் வெளிப்படையாக தெரிவித்திடல் வேண்டும் என்பது மட்டுமல்ல – தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானங்களை நிறைவேற்றிட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொண்ண வேண்டும் என்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *