அக்.1ல் பள்ளிகள் திறப்பு கிடையாது.. முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது குறித்து, பெற்றோரின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக்குழுவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்று அனுமதி அளித்து, பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை நிறுத்திவைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, செப்-29

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதை அடுத்து, அதை மேலும் தளர்வுகளுடன் நீட்டிப்பது, கொரோனா நோய்த் தொற்றின் நிலவரம் பற்றியும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது ;-

கடந்த 29.8.2020 மற்றும் 8.9.2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி தமிழ்நாட்டில் 1.10.2020 முதல் அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதித்து 24.9.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு எப்போது வரலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கூட்டத்திற்கு பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும். 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காண அக்.1 முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேளாண் தொழிலுக்கு மட்டும் விலக்களித்து, முதலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், ஏழைகள், சிறு தொழில் செய்வோர், சிறு வணிகம் செய்வோர் போன்றோரின் பொருளாதார நிலை பாதிக்கப்படும் என்பதை அறிந்து, அவர்களை பாதுகாக்க தமிழ்நாட்டில், உணவுப் பொருட்களை விலையின்றி வழங்குதல், ரொக்க நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. பின்னர், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா காலத்தில் கூட, இதுவரை 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் துவங்குவதற்காக புரியதுணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம், சுமார் 31,464 கோடி ரூபாய் முதலீடும், சுமார் 69,712 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.

இந்நடவடிக்கைகளால், ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதை ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை சுமார் 1,63,000 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *