குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம் குறித்து திமுக எல்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் மீதான தடையை நீக்கும்படி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, செப்-28

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன என்று குற்றம்சாட்டி, கடந்த 2017-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவற்றை சட்டசபைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர்.
இந்த செயல் சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபை உரிமைக்குழு, கடந்த 7-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் புதிதாக நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா திமுக எம்எல்ஏக்களுக்கான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சபாநாயகர், சட்டசபை செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்தது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை, உரிமை மீறலா, இல்லையா என்பதை உரிமைக்குழுவே தீர்மானிக்கும் என்று மேல்முறையீடு மனுவில் வாதாடப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *