விவசாய சட்டத்தை எதிர்த்து டெல்லி இந்தியா கேட் அருகே டிராக்டரை எரித்து போராட்டம்!

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் வெடித்திருக்கிறது. டெல்லி இந்தியா கேட் அருகே டிராக்டரை எரித்து பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

டெல்லி, செப்-28

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் விவசாயிகள் மிகப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வரலாறு காணாத வகையில் எழுச்சிமிக்க போராட்டங்கள் நடைபெறுகின்றன. கர்நாடகாவில் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றன. இதனிடையே டெல்லியில் பஞ்சாப் இளைஞர் காங்கிரஸார் இந்த புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். டெல்லி இந்தியா கேட் அருகே நடந்த போராட்டத்தின் போது திடீரென டிராக்டர் ஒன்றை சாலையில் உருட்டி விட்டனர். பின்னர் அந்த டிராக்டருக்கும் தீ வைத்து எரித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் இந்தியா கேட் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

மிகவும் பாதுகாப்பான இந்தியா கேட் பகுதியில் இளைஞர் காங்கிரஸார் ட்ராக்டரை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மளமளவென எரிந்த தீயை அணைத்தனர். வன்முறையை தூண்டும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *