பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது.! முதல்வர் வேட்பாளர் யார் என காரசார விவாதம்..!!

பரபரப்பான அரசியல் சூழலில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, செப்-28

தமிழக சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும். கொரோனா பரவல் தீவிரமாக உள்ள போதிலும், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அதை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

அதிமுகவுக்குள் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்று அவரது ஆதரவு அமைச்சர்கள் தொடர்ந்து பேட்டியளிக்கும்போது எல்லாம் கூறி வந்தனர். அதே போல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இது, அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து கருத்து தெரிவிக்க கூடாது. அதைத் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று ஓ.பி.எஸ்., இபிஎஸ் கூட்டறிக்கை மூலம் எச்சரித்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 293 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 293 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப் பட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர், அதிமுக பொதுச்செயலாளர், சட்டசபை தேர்தல் உள்ளிட்டவைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் பொதுக்குழுவை கூட்டி ஒப்புதல் பெற வேண்டும். இதனால், பொதுக்குழு கூடும் தேதியும் இன்றைய தினம் நடைபெறும் செயற்குழுவில் அறிவிக்கப்படலாம்?. அது மட்டுமல்லாமல் செயற்குழுவில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்பதால் இன்று நடைபெறும் அதிமுக செயற்குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *