ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், இந்திராணி முகர்ஜி உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லி . அக்டோபர்.18

 
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதில்  சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதனை தொடர்ந்து ப.சிதம்பரம் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

 பின்னர் டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர். இதனையடுத்து  திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. 


இதற்கிடையில்,  ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க  அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம் அவரை அக்டோபர் 24-ம் தேதி வரை ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி முகர்ஜி உள்பட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *