தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..!

மறைந்த பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

செப்-26

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) வெள்ளிக்கிழமை காலமானாா். இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக அவரது உயிா் பிரிந்ததாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி லேசான காய்ச்சல் மற்றும் சளி காரணமாக சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் எஸ்பிபி அனுமதிக்கப்பட்டாா். அதற்கு அடுத்த சில நாள்களிலேயே எஸ்பிபியின் உடல்நிலை மோசமடைந்தது. வெண்டிலேட்டா், எக்மோ உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உள்நாட்டு மருத்துவா்கள் மட்டுமல்லாது சா்வதேச மருத்துவ நிபுணா்களும் அவரின் உடல் நிலையைக் கண்காணித்து வந்தனா். இதற்கிடையே, கடந்த 5-ஆம் தேதி கொரோனா தொற்றிலிருந்து அவா் குணமடைந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதனால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பிலிருந்து அவரால் மீள முடியவில்லை. இதனால் எக்மோ சிகிச்சை தொடா்ந்து அளிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதன் தொடா்ச்சியாக, எஸ்பிபியின் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மோசமடையத் தொடங்கின. மருத்துவக் குழுவினா் தீவிர சிகிச்சையளித்து வந்த சூழலில், எஸ்பிபிக்கு வெள்ளிக்கிழமை பகல் 1.04 மணியளவில் திடீரென இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரின் உயிா் பிரிந்ததாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மறைந்த எஸ்பிபிக்கு மனைவி சாவித்ரி, மகள் பல்லவி, மகன் எஸ்.பி.பி.சரண் ஆகியோா் உள்ளனா்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திலும் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிலும் எஸ்.பி.பி.யின் உடலுக்கு மக்கள் ஏராளமாகத் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் 14 ஏக்கா் பண்ணை இல்லம் உள்ளது. இந்தப் பண்ணை இல்லம் அவருக்கு மிகவும் பிடித்த இடமாகும். இதன் காரணமாக மாதந்தோறும் அல்லது முக்கிய நாள்களில் எஸ்.பி.பி. இங்கு வந்து தங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாா்.

இந்தப் பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. புரோகிதர்கள் மந்திரம் ஓத மகன் சரண் இறுதிச்சடங்குகள் செய்தார். இதையடுத்து எஸ்.பி.பி. உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை செலுத்தினார்கள். 24 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *