எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவமனை அறிக்கை

எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எம்.ஜி.எம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சென்னை, செப்-24

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரணமணியத்துக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. அதற்குப் பிறகு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, இப்போது சகஜ நிலைக்கு திரும்பி வந்தார். வாய் வழியாகச் சாப்பிடும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது. இதனால், திரையுலகினர், ரசிகர்கள் அனைவருமே மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் திடீரென்று இன்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மோசமடைந்ததாகவும், கவலைக்கிடமாக உள்ளதாகவும் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“ஆகஸ்ட் 5-ஆம் தேதி அன்று எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எக்மோ உள்ளிட்ட மற்ற உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் இருந்து வருகிறார். கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை மோசமாகியுள்ளது. இதனால் அவருக்கு உயிர் காக்கும் அதிகபட்ச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவரது உடல்நிலையை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.”

இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் எஸ்பிபியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவருடைய ரசிகர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலர் அவர் பூரண நலம்பெற வேண்டி பிரார்த்தனைகளைத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *