கோவையில் ‘அம்மா நகரும் நியாய விலைக்கடை’- அமைச்சர் S.P.வேலுமணி தொடங்கி வைத்தார்
கோவை தொண்டாமுத்தூரில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை வாகன சேவையைத் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை, செப்-24

மலையோரக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் விதமாக 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக கடந்த 21.09.2020 அன்று 7 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் வாகனங்களை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் மாரியம்மன் கோயில் அருகிலுள்ள நியாயவிலைக் கடையில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை வாகனத்தை இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, ”இந்த நடமாடும் நியாயவிலைக் கடைகள் மூலம், மாதம் ஒருமுறை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில், சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வார். இதன் மூலம் மலைக் கிராமங்களில் வசித்துவரும் மக்களுக்கு மாதாமாதம் கிடைக்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி அவர்களின் இருப்பிடத்திலேயே கிடைக்கும்” என்றார்.
முன்னதாக, ரூ.1.13 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், தொண்டாமுத்தூர் பேரூராட்சி 5-வது வார்டு நரசீபுரம் ரோட்டில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொறுப்பு) ரூபன் சங்கர்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பழனிசாமி, வருவாய்க் கோட்டாட்சியர் தனலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவரகாநாத்சிங், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.