பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு..!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, செப்-24

சென்னை உயர்நீதிமன்றத்தில் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறான். தற்போது என்னுடைய மகன் புழல் சிறையில் அடைப்பட்டுள்ளார். புழல் சிறையில் ஏற்கனவே 50 கைதிகள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் பேரறிவாளன், கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர். அற்புதம்மாளின் மனுவை தமிழக அரசும் சிறைத் துறையும் நிராகரித்துவிட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் 30 நாள்கள் விடுப்பு வழங்கியுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வாரத்தில் பேரறிவாளனை பரோலில் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *