மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமைமீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமைமீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை, செப்-24

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன என்று குற்றம்சாட்டி, கடந்த 2017-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவற்றை சட்டசபைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர்.
இந்த செயல் சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபை உரிமைக்குழு, கடந்த 7-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் புதிதாக நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் செப்டம்பர் 24-ந் தேதி (இன்று) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை தள்ளிவைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, திமுக எம்எல்ஏக்களுக்கான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சபாநாயகர், சட்டசபை செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *