மத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனாவால் உயிரிழப்பு..! ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்.

டெல்லி, செப்-23

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், ரயில்வே இணை அமைச்சராக பதவி வகித்த சுரேஷ் அங்காடிக்கு கடந்த செப்டம்பர் 11-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது டுவிட்டரில், நான் இன்று பரிசோதனை செய்து கொண்டேன். தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது நான் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையை எடுத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டார்.

இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 11-ம் தேதியில் இருந்து இன்று வரை 12 நாட்களான மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சுரேஷ் அங்காடி உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்த முதல் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்காடி என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்த 4-வது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி ஆவார்

சுரேஷ் அங்காடி மறைவிற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *