கொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..!

மாநிலங்களவை கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 8 நாட்களுக்கு முன்பாகவே நிறைவு செய்யப்பட்டது. கொரோனா பரவல், எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம் போன்றவற்றால், மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லி, செப்-23

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அக்டோபர் 1ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரு சபைகளும் தினமும் 4 மணி நேரம் நடைபெற்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறை இன்றி சபைகள் இயங்கின. உறுப்பினர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டத்தொடரில் பங்கேற்க வசதியாக, இரு அவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. கொரோனா கால விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன.

ஆனால், 25-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்தால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து விட மத்திய அரசு திட்டமிட்டது. இன்றுடன் கூட்டத்தொடரை காலவரம்பின்றி ஒத்திவைக்க பரிந்துரை செய்தது. அதன்படி மாநிலங்களவையில் இன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதும் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதனை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். மாநிலங்களவையில் இன்று மதியம் 1 மணிக்கு அவை நேரம் முடிவடைந்ததும் இதற்கான அறிவிப்பை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘திட்டமிட்ட அமர்வுக்கு முன்னதாக மாநிலங்களவை கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 10 அமர்வுகளில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அமளி காரணமாக 3.15 மணி நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. அவையின் மொத்த அலுவல் செயல்பாட்டு நேரத்தின் 57% நேரம் செலவிடப்பட்டுள்ளது. முந்தைய அமர்வுகளைப்போன்று இந்த முறையில் அதிக நேரம் அவை நடைபெற்றுள்ளது’ என்றார்.

இதையடுத்து அவை காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டது.
அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறவிருந்த கூட்டத்தொடர் 10 நாட்களில் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *