கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர்களை சேர்க்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!!!

இந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழர்களை சேர்க்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, செப்-23

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்திய கலாச்சார தொன்மைகளை கண்டறிய மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழுவையும் அமைத்துள்ளது. இவை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில், இந்திய வரலாற்றை கண்டறியும் குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இடம்பெறாமல் இருக்கின்றனர். தமிழகம் என்பது சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அதிலும் தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் பல்வேறு கலாச்சார வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் 6ம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், இந்திய கலாசாரத்தை ஆய்வு செய்யும் குழுவில், மிகப் பழமையான திராவிடா் கலாசாரத்தைச் சேர்ந்த அல்லது தென்னிந்தியா்கள் குறிப்பாக தமிழர்கள் யாரும் இந்த நிபுணா் குழுவில் இடம் பெறாதது துரதிருஷ்டவசமானதாகும். சமீபத்தில் தமிழகத்தின் கீழடி உள்ளிட்டப் பகுதிகளில் நடத்தப்பட்ட தொல்லியல் துறை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை அனைத்தும் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நீங்கள் மாமல்லபுரம் வந்து, தமிழக பாரம்பரியத்தை நேரில் கண்டு வியந்தீர்கள். அப்போது, இந்திய வரலாறு மற்றும் கலாசாரத்தை எடுத்துக் கொண்டால், அதில் தமிழக கலாசாரம் மற்றும் மொழிக்கு இடமளிக்காமல் முழுடையடையாது என்று என்னிடம் குறிப்பிட்டிருந்தீர்கள்.

ஆனால், தற்போது, இந்திய கலாசார ஆய்வுக் குழுவில் தமிழர்கள் யாரும் இல்லாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்திய கலாச்சாரம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணா் குழுவை மறுசீரமைப்பு செய்து, அதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *