அலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் பறிபோவதா?.. டிடிவி தினகரன் கண்டனம்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருவர் மின்தடையால் ஆக்சிஜன் செலுத்த முடியாமல் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

சென்னை, செப்-22

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 40 நிமிடம் ஏற்பட்ட மின்தடையால் ஆக்சிஜன் செலுத்துவது தடைப்பட்டு 2 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மருத்துவமனை அருகே மின்வயர் துண்டிக்கப்பட்டதால் மின்தடை நேர்ந்ததாக அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார். மேலும், மின்தடை நேர்ந்தது உண்மை தான் என்றும் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழக்கவில்லை என்றும் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருவர் மின்தடையால் ஆக்சிஜன் செலுத்த முடியாமல் உயிரிழந்த நிகழ்வு கடும் அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே நோயின் வீரியத்தால் நாள்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில், நிர்வாக அலட்சியத்தால் இப்படி அநியாயமாக உயிர்கள் பறிபோவதை ஏற்கமுடியாது. இதற்குக் காரணமானவர்கள் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக இழப்பீடு வழங்கவேண்டும். தமிழகத்தில் இனி இத்தகைய சம்பவம் நிகழாமல் தடுக்கத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை அனுப்பிட வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *