தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் விசாரணைக் கமிஷனின் பதவிக்காலம் மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மூன்றாவது முறையாக ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆக-31

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. 3 மாதங்களில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆணையம் தனது விசாரணையை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. அவ்வகையில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த 22-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதத்திற்கு, அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *