எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்துறை தொடா்பான 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, செப்-20

‘விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா’, ‘விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா’, ‘அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா’ ஆகிய மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், தற்போது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை, பெருநிறுவனங்களுக்கு ஆதரவானவை என்று குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சோ்ந்த ஹா்சிம்ரத் கௌா் தனது மத்திய அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ள நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதை அடுத்து மாநிலங்களவையில் வேளாண் மசோதா சிக்கலின்றி நிறைவேறுவது உறுதியானது.

மாநிலங்களவையில், இந்த 3 மசோதாக்கள் மீது விவாதம் நடந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மசோதாவில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்து விளக்கி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். காரசாரமாக நீடித்த இந்த விவாதம் மதியம் வரை நீடித்தது. அதன்பின்னர், விவாதத்திற்கு பதிலளித்து வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசினார். அப்போது விவாதத்தை இன்றுடன் முடித்துக்கொள்ளக்கூடாது, நாளையும் நீட்டிக்க வேண்டும் என்றும், வேளாண் மந்திரியின் பதிலுரையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்தனர். இதனையடுத்து மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரியன், அவை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீது மசோதா நகலை கிழித்து எரிந்தார். மேலும், பல்வேறு எம்.பிக்கள் மசோதா நகலை கிழித்து எரிந்தனர். மசோதாவிற்கு எதிராக அவை தலைவரை முற்றுகையிட எம்.பிக்கள் முயற்சி செய்தபோது, அவை காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், அவை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மேசையில் இருந்த மைக் உடைக்கப்பட்டது. இப்படியாக, தொடர்ந்து, அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டதால், மசோதா மீது வாக்கு எதுவும் நடத்தப்படாமல் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் சிறிது நேரத்தில் அவை கூடியபோது மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் ஏற்கப்படவில்லை. மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து அவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *