ஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம்!! அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு

சென்னை, செப்-19

தமிழகத்தில் நிலத்தடி நீர் வளத்தை பெருக்க பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்தார். குடிநீர் மற்றும் பாசன வசதியை மேம்படுத்த தமிழகம் முழுவதும் ஏரி குளங்களை தூர்வாருவதற்காக குடி மராமத்து பணிகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கு வலு சேர்க்கும் வகையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி தனிப்பட்ட முறையில் பிரச்சாரம் தொடங்கினார். ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் ஒரு துளி மழை நீரையும் வீணாக்காமல் சேமிப்போம், நமக்காக,, நாட்டுக்காக நாளைக்காக என்று டிஜிட்டல் பிரச்சாரம் மூலம் பொதுமக்களை கேட்டுக் கொண்டார். அது மட்டுமில்லை உள்ளாட்சித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு கட்டிங்களிலும் மழை நீர் சேகரிக்கும் அமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுத்தார். இதன் பலனாக பெரும்பாலான வீடுகளிலும், அரசு கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு வசதி மேம்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நீர் மிகை மாநிலமாக உருவானது.

தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் இந்த ஆண்டும் மழை நீரை சேமிக்க அக்கறை செலுத்த வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், நாம் இன்று சேமித்து வைக்கும் ஒவ்வொரு துளி மழைநீரும், நாளைய நம் வாழ்வின் நம்பிக்கை விதையாகும். ஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம், பயனடைவோம். மறுபடியும் இணைவோம், மகத்தான சாதனை புரிவோம். மழைநீரை சேமித்து வளமாக வாழ்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்..

மேலும், பொறுப்பற்று நாம் சிந்தும், வீணடிக்கும் ஒவ்வொரு துளி நீரும் நமக்கு தரும் தண்டனை.மழைநீர் சேமிப்பு ஒன்றே நம் வாழ்வை சிறப்பாக்கும் என்று வலியுறுத்திவரும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி,மழைநீரை சேமிக்கத் தொடங்கும் முன், மழைநீர் சேகரிக்கும் தொட்டியை சுத்தம் செய்தால்தான், நீண்ட நாட்களுக்கு நீர் தூய்மையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீரை பாதுகாக்க கட்டிடத்தை சுற்றி ஆங்காங்கு 3 அடி ஆழமும் 12 அங்குல விட்டமும் கொண்ட துளைகள் அமைத்து, கூழாங்கல், மணல் கொண்டு நிரப்பி துளைகள் இடப்பட்ட ‘சிலாப்’கள் கொண்டு மூடலாம் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி யோசனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *