விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள்.. செப்.21 இல் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிராக செப்டம்பர் 21-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

சென்னை, செப்-19

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு விரோதமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று சட்டங்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 21-09-2020 (திங்கள் கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ‘ விவசாயிகளுக்கு விரோதமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று சட்டங்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *