25 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

25 துணை மின் நிலையங்களை சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

சென்னை, செப்-19

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சகட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின்னழுத்தத்துடன் சீரான மின்சாரம் மக்களுக்கு வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.

அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் எரிசக்தித் துறையின் சார்பில் ஈரோடு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 353 கோடியே 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

கடந்த ஆண்டு, 2019-ல் முதல்வர் லண்டன் பயணத்தின் போது, அங்கு இயக்கத்திலுள்ள ஸ்மார்ட் கிரிட் தொழில்நுட்பத்தினை பார்வையிட்டார்கள். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் அத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக செயல்பட்டு, மின் கட்டமைப்பு அலகுகளுக்கு ஏற்ப, காற்றாலை மின்சாரத்தின் உற்பத்தி அளவை நெறிபடுத்தும், சோதனை ரீதியான திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான திட்ட ஒப்பந்த ஆணையை பெங்களுருவில் உள்ள என்சென் குளோபல் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு முதல்வர் இன்று வழங்கினார். இந்த புதிய தொழில்நுட்பமானது அதிக காற்றாலை மின் உற்பத்தியை மின் கட்டமைப்பில் ஒருங்கிணைப்பதோடு மின் கட்டமைப்பின் அலகு வேறுபாடுகளையும் நெறிபடுத்த உதவும். இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், இ.ஆ.ப., எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப, மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல், இ.ஆ.ப., தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ். சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *